திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், வெள்ளூர், மற்றும் முசிறி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு கிராமம், கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பிரச்சாரத்தை துவக்கி வைத்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:- முசிறி தொகுதியில் அதிமுக ஆட்சியின் போது கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் காவிரிக்கரை அருகிலே தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு உப்பு நீர் தான் குடிநீராக கிடைக்கிறது என்று சொன்னார்கள். அதை நான் மனதில் கொண்டு தான் திமுக ஆட்சிக்கு வந்ததும் இன்றைக்கு மண்ணச்சநல்லூர், முசிறி மற்றும் துறையூர் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் ரூ 220 கோடி செலவு செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க பணிகள் மேற்கொண்டு வருகிறோம். முசிறி அருகே உள்ள திருத்தலையூர் ஏரியை நிரப்பி அங்குள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் காவிரியில் குடிநீர் மோட்டார் வைத்து சோதனை ஓட்டம் பார்த்து வருகிறோம். மேலும் காவிரியில் இருந்து நீர் வரும்போது குடிநீர் வழங்கல் வாரியம் மூலமாக 700 கோடி செலவில் புதிதாக நீர் ஏற்றும் பாசன திட்டம் உருவாக்கி தர விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் உதவி கேட்டு வருகிறோம்.
நீர் ஏற்றும் திட்டத்தின் மூலமாக உயரமான இடத்தில் உள்ள ஏரியை நிரப்பி அதன் மூலமாக கீழ்த்தளத்தில் உள்ள ஏரிக்கு தண்ணீர் கொண்டு நிரப்பி அப்பகுதி மக்களின் நீர் பற்றாக்குறையை நிறைவேற்றுவதற்கான திட்டத்திற்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அத்திட்டம் நிறைவேறவும் உள்ளது . விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீரேற்றும் பாசன வசதிக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மேலும் இப்பகுதிக்கு பாய் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இந்த தொழிலுக்கு இலவச மின்சாரம் கிடைக்குமா என பொதுமக்கள் கேட்டதற்கு இதுவரை பாய் தொழிலுக்கு இலவச மின்சாரம் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை.
அந்த வகையில் பார்க்கும்போது கயத்தாறு பகுதியில் இது மாதிரி கொடுத்திருந்தால், நான் உங்களுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன். ஏன் நான் இதை கூறுகிறேன் என்றால் நான் ஒன்று சொல்லிவிட்டு அது பொய்யாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான். அதை கவனத்தில் கொண்டு அவ்வாறு பாய் தொழிலுக்கு இலவச மின்சாரம் தரும் சூழ்நிலை இருந்தால் இப்பகுதி பாய் தொழிலாளர்களுக்கும் மிகவும் உறுதுணையாக இருப்பேன். ஆகவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது:-இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பினை உருவாக்கிட எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என பேசினார். இந்நிகழ்வில் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருச்சி கலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், காங்கிரஸ் ஒன்றிய தலைவர் நல்லேந்திரன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.