விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, “எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தமிழர் திருநாள் தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதலமைச்சர் சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம்; தமிழ்நாடு வாழ்க என அவர் வெளியிட்ட அறிவிப்பு; இவற்றின் மூலம் தமிழ்நாடு முழுவதும் எழுச்சியோடு தமிழர் திருநாள் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர்களும் நிர்வாகிகளும் அவரவர் பகுதிகளில் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். எங்களது வார்டுகளில் கோலப்போட்டியை தொடங்கி வைத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று அதற்கான பரிசுகளையும் வழங்கும் நாளாக தமிழர் திருநாள் கொண்டாடப்படுகிறது.
அதோடு அல்லாமல் அண்ணா மற்றும் கலைஞரும் இதை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார்கள். தமிழர்களின் புத்தாண்டு தை 1 ஆம் தேதிதான் என்பதை நிலை நிறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் மட்டும் அல்ல உலகத் தமிழர்களுக்கும் வாழ்த்துகளை முதல்வர் சொல்லியுள்ளார்” எனக் கூறினார்.