அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை தான் என எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமை தான் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறிமாறி அணி திரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையருக்கு ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு உள்ளதால் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது எனவே பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஓபிஎஸ்ஸின் அந்த கோரிக்கையை ஆவடி காவல்துறை நிராகரித்துள்ளது. தனிநபருக்கு சொந்தமான உள் அரங்கில் கூட்டம் நடப்பதால் இதில் தலையிட முடியாது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ள நிலையில் ஓபிஎஸ்ஸின் இந்தக் கோரிக்கை காவல்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது வரை 5 மாவட்டச் செயலாளர்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு எனும் நிலைப்பாட்டில் உள்ளனர். வைத்தியலிங்கம். மனோஜ் பாண்டியன், தர்மர், தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன் ஆகிய 5 பேர் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர்.