முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிழல் என கருதப்படும் ஜெ. பேரவை மாவட்டச் செயலாளர் இளங்கோவனுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் காவல்துறையினர் புதன்கிழமையன்று (பிப். 16) திடீர் சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணமும், பரிசுப்பொருள்களும் வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின்பேரில் இந்தச் சோதனை நடந்தது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் நிழல் போல அதிகார தோரணையில் செயல்பட்டு வந்தார். அப்போது அவர் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், மாநில கூட்டுறவு இணையத்தின் தலைவர் பதவியிலும் இருந்து வந்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இறுதிக்கட்ட பிரச்சாரம் முடியவுள்ள நிலையில், இளங்கோவன் மூலமாக வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப்பொருள்களும் வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கான பணம் மற்றும் சேலை, வேட்டி, வெள்ளி கொலுசு, மளிகை பொருள்கள், தங்க காசுகள் உள்ளிட்ட பரிசுப்பொருள்களை வாங்கி தனது பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் புதன்கிழமை (பிப். 16) காலையில் சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ்வுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே, அவருடைய பண்ணை வீட்டில் சோதனை நடத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன், வாழப்பாடி டி.எஸ்.பி. முத்துசாமி ஆகியோர் மேற்பார்வையில் நூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் பண்ணை வீட்டில் சோதனை நடத்தினர்.
இளங்கோவன் முன்னிலையில் இந்த சோதனை நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் காவல்துறை மற்றும் திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த சோதனையின்போது பண்ணை வீட்டில் இருந்து பெரிய அளவில் பணமோ, பரிசுப்பொருள்களோ கைப்பற்றப்படவில்லை எனக்கூறப்படுகிறது. கைப்பற்றிய பொருள்கள் குறித்த விவரங்களையும் காவல்துறையினர் வெளிப்படையாகத் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அதேநேரம், இளங்கோவனின் மேலாளர் நடராஜன் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை மட்டும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இளங்கோவன்தான் சேலம் மாவட்டத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக 7 தொகுதிகளையும், கூட்டணியில் இருந்த பாமக 2 தொகுதிகளையும் கைப்பற்றியது. அப்போது அதிமுகவினர், வாக்குப்பதிவுக்கு முதல் நாள் இரவு, வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன்களை வீடு வீடாக விநியோகம் செய்தனர். அதன் தாக்கம், தேர்தலிலும் எதிரொலித்தது. ஆனால், தேர்தல் முடிந்தபிறகு அந்தப் பரிசு கூப்பன்களுக்கு அதிமுகவினர் பரிசுகள் எதுவும் வழங்காமல் ஏமாற்றினர்.
இந்த பின்புலத்தில்தான், அதிமுகவினர் அப்படியொரு பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள்களை வழங்க திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இந்தச் சோதனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி இளங்கோவனின் வீடு, பண்ணை வீடு மற்றும் பினாமிகளின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் மீண்டும் இளங்கோவனை மையப்படுத்திய திடீர் சோதனை, அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.