நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக கட்சி இடம் பெற்றது. பாமக கட்சிக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கினர். இதில் பாமக போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதற்கு முன்பு நடைபெற்ற 2016 சட்ட மன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. அப்போது நடைபெற்ற தேர்தலில் 5 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. மேலும் மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு பாமக சென்றது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வரை அ.தி.மு.க.வோடு கூட்டணியை வைத்துக்கொண்டு, அதன் பிறகு திராவிட இயக்கங்களுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக்கொள்ள கூடாது என்ற மனநிலைக்கு பாமக தலைமை முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்த சகோதரர்கள் படை, சகோதரிகள் படை என்று புதிய அணிகளை உருவாக்கும் ஆலோசனையில் அன்புமணி இருப்பதாக கூறுகின்றனர். ஒரு வேளை அதிமுகவுடன் வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டால் துணை முதல்வர் பதவியும், இரண்டு அமைச்சர்கள் பதவியும் கேட்க பாமக தலைமை தயராகிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
பாமகவின் இந்த திட்டம் எடப்பாடி தரப்புக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அடுத்த தேர்தலில் பாமாகவுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் கட்சியில் தன்னை அடுத்த தலைவராக அறிவிக்க வேண்டும் என்றால் ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பை ஒதுக்கி வைக்க வேண்டும். அதற்கு பாமக மற்றும் மேலும் சில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கவும் எடப்பாடி தரப்பு தயாராக இருப்பதாக கூறுகின்றனர். இருந்தாலும் பாமகவின் துணை முதல்வர் கனவுக்கு எடப்பாடி தரப்பு முட்டுக்கட்டை போட்டுவிடும் என்று அரசியல் தரப்பு தெரிகின்றனர்.