தமிழக அரசு உத்தரவுப்படி நோய் கட்டுப்பாட்டுப் பகுதியை தவிர மற்ற இடங்களில் நேற்று டாஸ்மாக் கடைகள், பல நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன. கரோனா தாக்கம் தமிழகத்தில் அதிகமாக உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம் ஆன்லைனில் மது விற்பனைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த நிலையில், டாஸ்மாக் திறப்பை எதிர்த்து தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதே நேரத்தில், தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், ஜெயமுருகன் உள்ளிட்டோர் மது ஆலை நடத்திக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் கடுமையாக வைக்கப்பட்டது. பா.ம.க. உள்பட அரசியல் கட்சிகள் சில இரண்டு கழகங்களின் நிலைப்பாட்டையும் விமர்சித்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, கூட்டணிக் கட்சியான பா.ம.க தன் முடிவை விமர்சிப்பதைக்கூட பெருசா எடுத்துக்கவில்லை. ஆனால், தன்னோட சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக்கை எதிர்த்து பா.ம.க. போராட்டம் நடத்தியதை அறிந்து அப்செட்டாகிவிட்டார் என்று கூறுகின்றனர். கூட்டணி கட்சியாக இருக்கும் பாமக போராட்டம் வரைக்கும் போக வேண்டுமா என்று நினைத்துள்ளார்.