பா.ம.க.வும் ரஜினியும் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது, அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது என தமிழருவி மணியன் சமீபத்தில் பேசியது அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அவருடைய பதிலால் அ.தி.மு.க. தலைமை சற்று அதிருப்தியில் இருந்தது. அதே போல் ரஜினி, கமல், பாமக ஆகியோர் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்புகள் ஏற்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். அப்படி கூட்டணி அமைந்தால் அது ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை திமுகவிற்கு போகவிடாமல் தடுக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக 234 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தி வருவதாகவும். கூட்டணி குறித்து ஆறு மாதம் கழித்துதான் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ரஜினி, பாமக, கமல் என்று கூட்டணி அமைக்கலாம் என்றும், அப்படி ரஜினி, கமலுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடவும் பாமக தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. பாமகவின் இந்த நிலைப்பட்டால் அதிமுக தலைமை அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.