ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் போக வேண்டிய சூழ்நிலை வந்தால் அதற்கு முன் என் தலையை வெட்டிக்கொள்வேன் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. மாரடைப்பால் மரணம் அடைந்ததால் நிறுத்தப்பட்டிருந்த பயணம் நேற்று மீண்டும் துவங்கியது. பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூரில் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தம் வெவ்வேறானது. நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அமைப்புகள் கைப்பற்றியுள்ளன. இதனால் அனைத்துத் தரப்புகளுக்கும் அழுத்தம் தரப்படுகிறது. இது இருவேறு கட்சிகளுக்கு இடையே நடக்கும் சண்டை அல்ல. அவர்களால் கைப்பற்றப்பட்ட அமைப்புகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இருக்கும் சண்டை. நாட்டின் இயல்பான நடைமுறைகளைக் காணமுடியவில்லை.
பஞ்சாப் மாநிலம் பஞ்சாபில் இருந்து ஆளப்பட வேண்டும். டெல்லியில் இருந்து ஆளப்படுவதால் அதை பஞ்சாப் மாநில மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த ஒற்றுமை யாத்திரைக்கு வருண் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படுமா எனக் கேட்கின்றனர். வருண் காந்தி பாஜகவில் உள்ளார். அவர் இங்கு வந்தால் அது அவருக்குத்தான் பிரச்சனை ஆகும். என்னால் எப்பொழுதும் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் செல்ல முடியாது. அப்படிப் போக வேண்டிய சூழ்நிலை வந்தால் அதற்கு முன் என் தலையை வெட்டிக்கொள்வேன். எனது குடும்பத்தின் கோட்பாடு வேறு” எனக் கூறினார்.