மோடியின் மாயவலையில் தமிழர்கள் ஒருபோதும் சிக்கமாட்டார்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வருகை புரிந்த பிரதமர் மோடி இலங்கை தமிழர்களின் உரிமைகளை காப்போம்; இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வோம் என்று பேசியிருக்கிறார். இலங்கையில் 40 ஆண்டு காலமாக பல்வேறு இன்னல்களை அனுபவித்த நிலையில் தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு பெறவேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை அதிபர் ஜெயவர்த்தானாவுடன் 1987- ல் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக வடக்கு, கிழக்கு மாகாணம் ஒன்றாக இணைக்கப்பட்டு தமிழ் தாயகப்பகுதி உருவாக்கப்பட்டு வரதராஜப் பெருமாள் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. சிங்கள மொழிக்கு இணையான தகுதியை தமிழ்மொழி பெற்றது. இந்த ஒப்பந்தத்ததிற்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் 13- வது அரசமைப்பு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்திற்கு சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தாலும், அதனுடைய முழுமையான பலன்களை தமிழர்கள் இன்றைக்கு பெற முடியாத நிலையில் இருக்கிறார்கள். ராஜிவ் காந்தி ஒப்பந்தம் செய்து கொண்ட போது, இந்தியாவின் கட்டுபாட்டுக்குள் இலங்கை இருந்தது. ஆனால், இன்றைய நிலையை நினைத்துப் பார்க்கிற போது மிகுந்த கவலையைத் தருகிறது.
இலங்கையில் இந்தியாவின் முக்கியத்துவம் குறைந்து சீனாவின் ஆதிக்கம் வலுவடைந்து விட்டது. இந்தியாவின் முதலீடுகளை விட, சீனாவின் முதலீடுகள் பல மடங்கு குவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கின்ற வகையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இன்றைய இலங்கை அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று வருகிறது. இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து மே 2019- ல் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையம் அமைக்கப்பட இருந்த திட்டத்தை இலங்கை அரசு தற்போது ரத்து செய்திருக்கிறது.
அதேபோல, அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் சீனாவின் முதலீடு அதிகரித்து வருகிறது. தேயிலை சாகுபடி செய்யும் மத்திய பகுதியில் இருந்து தெற்கு பகுதியிலுள்ள துறைமுகங்களுக்கு செல்வதற்கான நெடுஞ்சாலை திட்டத்தை சீனா அரசு செயல்படுத்தி வருகிறது. இத்தகைய பின்னணியில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கை நாட்டில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது, இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்துவதாக உள்ளது. சுதந்திர இந்தியா இதுவரை காணாத வகையில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையின் அனைத்து துறைகளிலும் ஊடுருவி இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டதற்கு காரணம் திறமையற்ற பா.ஜ.க. அரசின் வெளியுறவுக் கொள்கைதான்.
இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதாக பிரதமர் மோடி பேசியிருப்பது மிகுந்த வியப்பைத் தருகிறது. நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் இருந்து மீன், கருவாடு இலங்கைக்கு ஏற்றுமதி செய்வது நடைபெற்று வந்தது. ஆனால், கடந்த நவம்பர் மாதத்தில் இதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இதனால் சென்னையில் மட்டும் ரூபாய் 500 கோடி மதிப்புள்ள 6 ஆயிரம் டன் கருவாடு தேங்கிக் கிடக்கிறது. இதனால் கடுமையான பொருளாதார இழப்பை மீனவர்கள் சந்தித்து வருகிறார்கள். இது குறித்து பலமுறை மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை முன் வைக்கப்பட்ட பிறகும் இலங்கை அரசின் தடையை நீக்குகிற சூழல் ஏற்படவில்லை.
அதேபோல, மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். கடந்த ஜனவரி இறுதியில் ராமநாதபுரத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று மீனவர்கள் கோரிக்கை எழுப்பினார்கள். எந்த ராமநாதபுரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி மீனவர்களுக்கென தனி அமைச்சகம், ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு நவீன வசதிகள் கொண்ட படகுகள் வழங்கப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி கொடுத்ததோ, அதே ராமநாதபுரத்தில்தான் படுகொலை செய்யப்பட்டு நீதிக்காக போராடுகிறார்கள். ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாத பா.ஜ.க. அரசு படுகொலைக்குக் காரணமான இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை. இதை விட மீனவர் விரோதப் போக்கு வேறு என்ன இருக்க முடியும்?
எனவே, இந்தியாவிலேயே பா.ஜ.க. கால் ஊன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால் மகாகவி பாரதியார், ஒளவையார் கவிதை வரிகளை கூறி, தமிழ் மக்களை ஏமாற்றி விடலாம் என்று பிரதமர் மோடி பகல் கனவு காணுகிறார். தமிழர்களுக்கு விரோதமாக பல்வேறு நடவடிக்கைளை எடுத்திருக்கிற பிரதமர் மோடி விரித்திருக்கிற மாயவலையில் மடியில் கணம் உள்ள காரணத்தால் அ.தி.மு.க.வினர் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சுயமரியாதையும், மானமும் உள்ள தமிழர்கள் ஒருபோதும் மோடியின் மாயவலையில் சிக்கமாட்டார்கள்." இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.