ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சியில் மேனகா என்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
தற்பொழுது ஒற்றைத் தலைமை பிரச்சனையால் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக பிரிந்து கிடக்கின்ற சூழலில் எடப்பாடி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் இதுவரை தங்களது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பாஜக போட்டியிடவில்லை என்றால் மட்டுமே நாங்கள் வேட்பாளரை அறிவிப்போம் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இதுவே இந்த காலதாமதத்திற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. மறுபுறம் அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்திருந்தது. இன்று அந்த இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ''ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக கையொப்பம் போட்டு கொடுக்கக் கூடிய வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறார்கள். அதிமுக பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட என்னை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்காமல் உள்ளது. அதனால் நீதிமன்றம் இந்த இடைத்தேர்தலில் எங்களுடைய மனுவை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுங்கள்' என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 'தயவு செய்து பதிலளிக்க கால தாமதம் செய்யாதீர்கள்' எனத் தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.