திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சி.பி.எம்.கட்சி வேட்பாளர் தோழர் சச்சிதானந்தத்தை ஆதரித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான சிலுவத்தூர் எஸ்.எம்.பி. பள்ளி, குமரன் திருநகர், அண்ணா நகர், விவேகானந்தன் நகர், காட்டாஸ்பத்திரி, பஸ்ஸ்டாண்டு, கிழக்கு ஆரோக்கியமாதா தெரு, மெங்கில்ஸ்ரோடு. பெல்பர்க் ரோடு, என்.வி.ஜி. தியேட்டர் நாகல்நகர் உட்பட 14 இடங்களில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
அப்போது ஒய்எம்ஆர்பட்டியில் உள்ள முருகன் கோவிலில் அமைச்சர் ஐ.பெரியசாமி உடன் வேட்பாளர் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது அங்குள்ள கோவில் பூசாரி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கும் பரிவட்டம் காட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதை தொடர்ந்து அதன் அருகே உள்ள டீக்கடைக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி பிட் நோட்டீசுகளை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கொடுத்துவிட்டு டீக்கடைக்குள் வேட்பாளர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மேயர் இளமதியுடன் உட்கார்ந்து டீ குடித்துவிட்டு அங்குள்ளவர்களிடம் அரிவாள் சுத்தியலுக்கு வாக்கு சேகரித்துவிட்டு சென்றார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர்பாலபாரதி, தோழர் பாண்டி, திண்டுக்கல் மேயர் இளமதிஜோதி பிரகாஷ், துணை மேயர் இராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார் வரவேற்று பேசினார்.
இந்த பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.கட்சியை அகற்ற 2ஆவது சுதந்திர போராட்டத்திற்கு தயாராகி விட்டார்கள். அதற்கு காரணம் ஜி.எஸ்.டி. வங்கிகளில் பண பரிமாற்றம் செய்தால் அதற்கு கமிஷன், அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களுக்;கு கூட அதிகவரி, உள்ளிட்ட பல காரணங்களால் மோடி தலைமையிலான பா.ஜ.க. கட்சியை விரட்ட தயாராகிவிட்டார்கள். திராவிட மாடல் ஆட்சிநாயகன் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் திண்டுக்கல் மாநகருக்கு எண்ணற்ற நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ரூ.550 கோடியில் திண்டுக்கல் மாநகர மக்களின் குடிதண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வண்ணம் வைகை அணையில் இருந்து குழாய்கள் மூலம் குடி தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. திண்டுக்கல் மாநகருக்கு பேரணை, ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம், காவிரி கூட்டுக்குடிநீர் தற்போது வைகையில் இருந்து கூட்டுக்குடிநீர்; கொண்டுவரப்பட உள்ளது. திமுக ஆட்சியின் போது தான் திண்டுக்கல்லுக்கு மேம்பாலங்கள் கட்டிக்கொடுக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நாகல்நகர் ரயில்வே நிலைய மேம்பாலம், திருச்சி சாலை மேம்பாலம், கட்டிக்கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமமின்றி செல்லும் நிலைமை உருவானது. இது போல நாகல்நகர் பகுதியில் வசிக்கும் கைத்தறி நெசவாளர்களான சௌராஷ்டிரா மக்களின் நலன் கருதி பாரம்பரிய கோவிலினை காப்பாற்றி கொடுத்ததோடு கைத்தறி நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு கைத்தறி நெசவாளர்களை காக்க தவறிவிட்டது. தற்போது தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கைத்தறி நெசவாளர்களை காப்பாற்ற திண்டுக்கல்லை சுற்றி நெசவுபூங்கா அமைப்பதுடன் அவர்களுக்கான கூலியையும் உயர்த்தி கொடுத்துள்ளார் என்றார். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு திண்டுக்கல் மாநகர மக்களின் நலன் கருதி திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு தனி ரயில் வசதி செய்து கொடுக்கப்படும். அந்த ரயில் திண்டுகல்லில் இருந்து புறப்படும். இதுபோல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விமான நிலையம் அமைய திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாக இருக்கும் என்றார். இங்கு சி.பி.எம். கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் சச்சிதானந்தம் 24 மணிநேரமும் மக்களுக்கான பணியாற்றக் கூடியவர் மண்ணின் மைந்தர் அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று கூறினார்.