இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவை தேர்தல் பணி தொடர்பாக ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் திமுக உயர்மட்ட குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்டச் செயலாளர்களான கே.ஆர்.என். ராஜேஷ்குமார், மதுரா செந்தில் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போன்று ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டுள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலின் போது திமுக சார்பில் நாமக்கல் மக்களவைத் தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதி மதிமுகவிற்கும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு தமிழக காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் இன்று (28.01.2024) மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. திமுக குழுவினருடன் காங்கிரஸ் சார்பில் 5 பேர் கொண்ட குழுவினர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் திமுக தனது கூட்டணிக் கட்சிகளில் முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.