Skip to main content

“தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது” - கே.சி. வீரமணி 

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
K.C. Veeramani condemn dmk government

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட எல்மாங்குப்பம் பகுதியில் எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாதனூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி, அப்துல் ரஹீம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார், திரைப்பட நடிகர் ஏ.பி. ராஜேந்திரகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, “தமிழகத்தில் திராவிட கட்சியை கொண்டு வர திமுகவை தொடங்கிய அறிஞர் அண்ணா, 18 ஆண்டுகளுக்குப் பிறகு தான் எம்.ஜி.ஆர். ஆதரவோடு ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஆனால் கட்சியை தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த ஒரே கட்சி அதிமுக என்ற உலக வரலாற்று சாதனை படைத்தவர் எம்.ஜி.ஆர். அண்ணா வகுத்துக் கொடுத்த கொள்கையை மறந்து திமுக குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் செய்து வருகிறது.

தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் எல்லாம் குறுநில மன்னர்களாக செயல்பட்டு வருகின்றனர். மன்னராட்சி தமிழக மக்களுக்கு தேவையா? திமுகவில் அப்பா, மகன், பேரன், மச்சான், மருமகன், அண்ணன், சகோதரி என வாரிசு அரசியல் செய்து வரும் இந்த நிலை உலகத்தில் எங்குமே இல்லை. அப்படி இருந்த ஆந்திரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வாரிசு அரசியல் ஆட்சியை இழந்துள்ளது. இதே நிலைமை தான் தமிழகத்தில் ஏற்படப் போகிறது. 

மக்கள், திமுக ஆட்சியை ரொம்ப விரும்புகின்றனர் என ஸ்டாலின் தெரியாமல் பேசி வருகிறார். வீதியில் இறங்கி கேட்டால் தெரியும் உங்கள் ஆட்சியின் அவலம், அரசு ஊழியர்கள் உங்களுக்கு ஓட்டு போட்டு வேதனையில் இருக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதி எப்போதும் திமுகவால் செயல்படுத்த முடியாது.

இதற்கெல்லாம் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைந்தால் மட்டுமே சாத்தியம். பல லட்சம் கோடி வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வந்து புதிய தொழில் உருவாக்குவதாக ஸ்டாலின் தெரிவிக்கிறார். அன்னிய செலாவணி ஈட்டிக் கொடுக்கின்ற தொழிலான தோல் தொழிற்சாலைகள் ஆம்பூர் பகுதியில் மூடப்பட்டு வருவதால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. தமிழக அரசு இயந்திரம் மிக மோசமான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு அதிமுக நிச்சயம் வெல்லும். வருகின்ற தேர்தலில் கழகத்தினர் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு கடுமையாக உழைக்க வேண்டும்” எனப் பேசினார்.

சார்ந்த செய்திகள்