பி.எச். பாண்டியன் மறைவுக்கு மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள செய்தியில், ''அதிமுக-வின் முன்னணி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
நெல்லை மாவட்டம் தந்த அரசியல் தலைவர்களில் சிறப்பான பங்களிப்புகளை தந்து அரசியலில் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர்கள் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவராகவும் திகழ்ந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், சபாநாயகர் உள்ளிட்ட அரசியல் அந்தஸ்துகளை கடந்து, மிகச் சிறந்த வழக்கறிஞர் என்றும் போற்றப்பட்டார். நல்ல கல்வியாளர், சிறந்தபேச்சாளர் என்பதும் இவரது கூடுதல் தகுதிகளாக இருந்தது.
அவர் தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்த காலகட்டத்தில் இந்திய சட்டப் பேரவை வரலாற்றில் பல அரசியல் பாடங்களை வகுத்துத்தளித்தார். சபாநாயகருக்கு "வானளாவிய அதிகாரம்" உண்டு என அவர் முழங்கியது நீதிமன்ற கதவுகளில் உரக்க எதிரொலித்தது.
சபாநாயகரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்பதை தைரியமாக அறிவித்து இந்திய அரசியலில் இப்பதவிக்கு சிறப்புகளையும், ஆளுமைகளையும் சேர்த்தார். சபாநாயகராக இருப்பவர்கள் பி.எச்.பாண்டியனை நோக்க வேண்டும் என்ற அளவிற்கு அவரது ஆளுமை இன்றளவும் பேசப்படுவது அவரது சிறப்புகளை காட்டுகிறது.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அதிமுக-வினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்''. இவ்வாறு கூறியுள்ளார்.