Skip to main content

ப.சிதம்பரத்தின் கருத்தை கடுமையாக விமர்சித்த மகளிர் காங்கிரஸ் தலைவி

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

 

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பாராட்டியுள்ளனர்.

 

p chidambaram



முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தை கொண்ட பா.ஜனதாவை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த டெல்லி மக்கள் தோற்கடித்துள்ளனர். 2021-22-ம் ஆண்டுகளில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை காட்டியதற்காக டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று கூறி உள்ளார்.
 

இந்தநிலையில், ப.சிதம்பரம் ஆம் ஆத்மி வெற்றியை பாராட்டியதை டெல்லி மகளிர் காங்கிரஸ் தலைவியும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளுமான ‌ஷர்மிஸ்தா முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரத்தின் பதிவை வெளியிட்டு கூறி இருப்பதாவது:-
 

பா.ஜனதா கட்சியை தோற்கடிக்கும் பொறுப்பை, ஆம் ஆத்மி கட்சிக்கு நாம் விட்டுக்கொடுத்து விட்டோமா? அப்படி இல்லை என்றால், நம்முடைய தோல்வி குறித்து கவலைப்படுவதற்கு பதில் ஆம் ஆத்மி வெற்றியை நாம் ஏன் கொண்டாடி கொண்டிருக்கிறோம்?


 

இப்படியே, பா.ஜனதாவை தோற்கடிக்கும் பொறுப்பை மாநில கட்சிகளுக்கு கொடுத்து விட்டால் மாநில காங்கிரஸ் கமிட்டிகள், தங்களுடைய கடையை இழுத்து மூடிவிடலாம் என்று கூறியுள்ளார். 
 

டெல்லி சட்டசபை தேர்தலில் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ள ‌ஷர்மிஸ்தா முகர்ஜி, ஆம் ஆத்மி கட்சி வெற்றியை பாராட்டிய ப.சிதம்பரத்தின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ஷர்மிஸ்தா முகர்ஜியின் இந்த விமர்சனம் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்