
வன்னியர்கள், முதலியார்கள் சரிசம பலத்துடன் உள்ள தொகுதி ஆற்காடு. இந்தச் சாதிகளைத் தாண்டி வெற்றிகளைத் தீர்மானிப்பதில் பெரிய அளவில் உள்ள பட்டியலினச் சாதிக்குப் பெரும் பங்குண்டு. அதற்கடுத்து, மைனாரிட்டியாக உள்ள சாதி வாக்குகள். திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ ஈஸ்வரப்பனும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் முன்னாள் எம்.எல்.ஏ இளவழகனும் இங்கு போட்டியிடுகிறார்கள். ஈஸ்வரப்பன் முதலியார் சாதி, இளவழகன் வன்னியர்.
திமுக வேட்பாளருக்குப் பலம், எதிர்த்துப் போட்டியிடுவது பாமக என்பதுதான். இதனால் தன் சாதி வாக்குகள், பட்டியலின, சிறுபான்மையின வாக்குகள் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என நம்புகிறார். கடந்த 5 ஆண்டுகளாக எம்.எல்.ஏவாக இருந்தும் தொகுதி மக்களைப் பெரும்பாலும் சந்திக்காமல் முடங்கியிருந்ததே அவருக்குப் பெரிய மைனஸ்சாக உள்ளது. கட்சி தொண்டர்களிடம் பெரியளவில் ஒட்டுதல் இல்லாமல் இருந்தது தேர்தல் களத்தில் எதிரொலிக்கிறது.

சிட்டிங் எம்.எல்.ஏ மீது மக்களிடம் உள்ள அதிருப்தியும், தொகுதியில் உள்ள வன்னியர் வாக்குகள் முதலிடத்தில் இருப்பதும் தனக்குப் பெரிய பலமாக நினைக்கிறார் பாமக வேட்பாளர் இளவழகன். பட்டியலின, சிறுபான்மையின வாக்குகளை பாமக வேட்பாளர் இளவழகனால் கவர முடியவில்லை. 2006-2011ல் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இளவழகன் இருந்தார். அப்போது பெரியளவில் தொகுதிக்கென எதுவும் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. சொந்தக் கட்சியினரும் இவருக்கு எதிர்ப்பு. மேல்மட்ட தொடர்பு மூலம் சீட் பெற்று, வேலை செய்யுங்கள் எனக் கட்சியினரை விரட்டுவது இவருக்கு மைனஸ்.
அமமுக ஜனார்த்தனம், நாம் தமிழர் கட்சி கதிரவன், மக்கள் நீதிமய்யம் முகமது ரபீக் போன்றவர்கள் ஆற்காடு நகரத்தை தாண்டாமல் சுற்றிச் சுற்றி வருகின்றனர். வெற்றி பெற மாட்டோம் எதற்குக் சுற்றி வரவேண்டும் என நினைத்துவிட்டார்களோ என்னவோ பிரச்சாரத்தில் டல்லடிக்கிறார்கள். இந்த தொகுதியில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் செல்வாக்குக் கணிசமாக உள்ளதால் அவரின் ஆதரவைப் பெற இரண்டு வேட்பாளர்களும் முட்டி மோதியுள்ளனர். அவரின் அருளாசி யாருக்கு என்பது இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.