அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்களை இன்று காலை தேர்தல் ஆணையத்திடம் சி.வி.சண்முகம் அளித்தார்.
சுய விருப்பத்துடனும், முழு மனதுடனும் இடைகால பொதுச் செயலாளரை தேர்வு செய்ததாக பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதி இருந்தனர். அந்த ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
கடிதங்களை வழங்கிய பின் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என் பின்னாடி தான் அதிமுக இருக்கிறது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் ஓபிஎஸ் கொடுக்கவில்லை. கிளிப்பிள்ளை பேசுவது போல் நான் தான் ஒருங்கிணைப்பாளர் என சொல்லிக்கொண்டு உள்ளார். ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டு விட்டது. பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. இடைகால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்.
மொத்தமுள்ள 2663 பொதுக்குழு உறுப்பினர்களில் 2532 உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 65 சட்டமன்ற உறுப்பினர்களில் 61 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 5 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர் சொல்லுவதெல்லாம் நான் ஒருங்கிணைபாளர் என்பதை மட்டுமே சொல்லிக்கொண்டு உள்ளார்” எனக் கூறினார்.