தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதிகட்ட பிரச்சாரத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த சில தினங்களாகவே அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆளும் அதிமுக பாஜக கூட்டணிக் கட்சிகள், பல இடங்களில் பண பட்டுவாடாவை நடத்தி வருகிறன.
பெரும்பான்மையான இடங்களில் பொதுமக்களும் திமுகவினரும் சேர்ந்து சட்டத்துக்கு புறமாக பண பட்டுவாடா செய்யும் அதிமுக கூட்டணிக்காரர்களை பிடித்துக்கொடுக்கும் சம்பவம் நடந்துகொண்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை எந்தத் தேர்தலிலும் பறிமுதல் செய்யாத அளவிற்கு கணக்கில் வராத பணங்கள் பிடிபட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, சனிக்கிழமை இரவு, சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகர், ஏழாவது வார்டு, ஒன்றாவது தெருவில் அதிமுகவினர் பணம் விநியோகம் செய்வதை கண்ட அப்பகுதி மக்களும், திமுகவினரும், காவல்துறைக்கு பலமுறை தகவல் கொடுத்தும் காவல்துறை அங்கு வரவில்லை. இதனால் பொதுமக்களுடன் சேர்ந்து அதிமுகவினரிடம் இருந்த கணக்கில் வராத மூன்றரை லட்சம் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுகவினர், சில ரவுடிகளுடன் வந்து அங்கிருந்த பொதுமக்களையும் திமுகவினரையும் கண்மூடித்தனமாக்கத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ஐந்து பேர் திருவெற்றியூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே இரவு நேரத்தில், திடீரென மருத்துவமனைக்குள் புகுந்த அதிமுக திருவெற்றியூர் வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான குப்பன் மற்றும் அவரது மகன் கார்த்திக் மோகன், ஆகியோர் ஐம்பதுக்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் வந்து, அங்கிருந்த திமுகவினரை மீண்டும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த மூன்று பேர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பின் அங்கு வந்த போலீஸ் துணை கமிஷ்னரிடம் சம்பவம் நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சி பதிவுகளையும், அந்த தாக்குதலில் ஈடுபட்ட வேட்பாளரின் மகனையும் சுட்டிக்காட்டி புகார் கொடுத்துள்ளனர். அதை பார்த்த துணை கமிஷ்னர், இதற்கு தேர்தல் கமிஷன் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், கோபம் அடைந்த பொதுமக்களும், திமுக கூட்டணி கட்சியினரும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். பிறகு அங்குவந்த போலீஸார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமரசம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைத்தனர். ஆனால், இதுவரை தாக்குதலில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் குப்பன் மற்றும் அவரது மகன் கார்த்திக் மோகன் மற்றும் அங்கு வந்த ரவுடிகள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காதது அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
படங்கள்: சேகுவேரா