எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று 11.30 மணிக்கு வெளியிட்ட தீர்ப்பில், 'அதிமுகவில் ஜூன் 23 ஆம் நடந்த பொதுக் குழுவில் இருந்த நிலையே நீடிக்கும் என நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் "அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருமனதாக ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியை கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும் என்று சொன்னார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, சில சுயநலவாதிகளை சேர்த்துக்கொண்டு தன்னை தன்னிச்சையாக தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதால் அந்த 23ம் தேதி பொதுக்குழு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கலைந்து சென்றது.
அதன்பிறகு 11ம் தேதி பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் விதியை மதிக்காமல் செயல்பட்டார். ஆனால், இன்று நீதி தேவதை கடந்த ஜூன் மாதம் 23ம் தேதிக்கு பிறகு என்ன நடந்ததோ அதை எல்லாம் ஒத்தி வைத்துள்ளது. மேலும் அவர்(ஈ.பி.எஸ்.) தற்காலிகமாக நியமித்த அனைத்து பதவிகளும் நிராகரிக்கப்பட்டு, இனிமேல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பொதுக்குழு கூட்ட வேண்டும் என்று நீதிமன்றம் சத்தியத்தின் பக்கம் நின்று, ஓபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது" என்றார்