எடப்பாடியை பெங்களூரில் இருந்து வந்த ஒரு டீம் அடிக்கடி ரகசியமாக சந்திப்பதாக சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே மக்களை ஈர்க்கும் வகையில் எடப்பாடியின் நடை, உடை, பாவனைகளில் மாற்றத்தை ஏற்படுத்த, பெங்களூர் டீம் நியமிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாரத்திற்கு இரண்டு நாள், தலா மூன்று மணி நேரம் பயிற்சி கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் சசிகலாவின் சிறைவாசம் அக்டோபர் 13-ந் தேதியோடு நிறைவடைய இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவுக்கு தன் விசுவாசத்தை அடிக்கடி எடப்பாடி தெரிவித்தாலும், அவர் ரிலீசாகி வந்து, கட்சியின் முக்கிய பதவியில் உட்கார்ந்து கொண்டு, எல்லோரையும் அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதை எடப்பாடி கவலையில் ஆழ்த்தியுள்ளதாக சொல்கின்றனர். இந்த நிலையில், 5-ந் தேதி நடக்கவிருக்கும் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்தின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சசிகலா பரோல் கேட்டிருப்பதாக சொல்கின்றனர். இந்தத் திருமணத்திற்கு அ.தி.மு.க.வில் இருக்கும் அமைச்சர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை அனைவருக்கும் ஜெய் ஆனந்த் தரப்பு அழைப்பு கொடுத்திருப்பதாக சொல்கின்றனர்.
அதனால் அ.தி.மு.க. பிரமுகர்களும் சசிகலாவும் சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இ.பி.எஸ்.ஸோ, சசிகலாவின் பரோலுக்கு பா.ஜ.க. பிரேக் போடும் என்று எதிர்பார்ப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதே பதட்டம், சசியால் முதல்வர் பதவி பறிக்கப்பட்ட ஓ.பி.எஸ்.சுக்கும் இருப்பதாக கூறுகின்றனர்.