எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் எடப்பாடி தரப்பு உற்சாகமாக உள்ளது. அதேசமயம் இனி ஓபிஎஸ் தரப்பு அதிமுக கொடி, சின்னம் என எதையும் உரிமை கொண்டாட முடியாது. அப்படி செய்தால் அது சட்டப்படி குற்றம் என ஓபிஎஸ் தரப்பை எச்சரித்து வருகின்றனர் இபிஎஸ் அணியினர்.
மறுபுறம் திருச்சியில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று முடிந்து இன்று மாலை நடைபெற இருக்கிறது. முன்னதாக மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட வந்த ஓபிஎஸ்-இன் தீவிர ஆதரவாளர் வைத்தியலிங்கம், ''நாங்கள் மூன்று லட்சம் பேர் வருவார்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் இப்பொழுது சொல்வதை எல்லாம் பார்த்தால் நான்கு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்'' என தெரிவித்திருந்தார். ஆனால் எடப்பாடி தரப்போ கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் ஓபிஎஸ்-க்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த திருச்சி மாநாடு குறித்து ஓபிஎஸ்-இன் சொந்த தொகுதியான பெரியகுளத்தில் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்-ஐ கும்பிடுவது போன்று வைக்கப்பட்ட பேனரை அகற்ற போலீசாரிடம் புகாரளித்தது எடப்பாடி ஆதரவாளர்கள் தரப்பு. இதனால் போலீசாரே உத்தரவிட்டு அந்த பேனர்களை அகற்ற வைத்தனர். தொடர்ந்து கர்நாடக தேர்தலில் அதிமுக தரப்பு என கூறிக்கொள்ளும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களை ஏற்க கூடாது எனவும் புகாரை எழுப்பியது எடப்பாடி தரப்பு. இப்படி ஓபிஎஸ் தொடும் இடங்களில் எல்லாம் எதிர்ப்புகளை உயர்த்தி வருகிறது எடப்பாடி தரப்பு.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ்-ன் அடுத்தகட்ட முடிவு என்னதாக இருக்கும்; புதிய கட்சியை ஓபிஎஸ் ஆரம்பிப்பாரா; சசிகலா டி.டி.வி.தினகரனுக்கு முக்கியத்துவம் இருக்குமா என்ற பல்வேறு கேள்விகளுக்கு முடிவு கிடைக்கும் என கூறப்படுகிறது. திருச்சி மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இருபது தடுப்புகள் அமைக்கப்பட்டு மொத்தம் 25000 நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமை அலுவலகமான 'எம்ஜிஆர் மாளிகை' போன்ற முகப்பு கொண்ட பிரமாண்ட மேடையும் போடப்பட்டுள்ளது.
எடப்பாடி தரப்பு கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தும் ஓபிஎஸ் தரப்பின் செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகாரளித்தாலும் இது குற்றவியல் நடவடிக்கை அல்ல சிவில் பிரச்சனை நீதிமன்றத்தின் மூலம்தான் நீங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என வழக்கு பதிவு செய்ய போலீசார் மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என்ற மோடில் ஓபிஎஸ்சும், 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' மோடில் எடப்பாடி தரப்பும் பனிப்போர் நடத்தி வருகிறது.