கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணுபிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தையும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிக மிகுந்த மோசமான உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும் பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும், ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார் அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?
காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்த பிரச்சார கூட்டத்தின் வாயிலாக நான் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும். மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி. ராஜ்யசபா உறுப்பினர் என பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போது தான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதை காண முடிந்தது.
பாஜக அரசை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய பங்காற்றுகிறார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்றை எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் தற்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க சிறப்பு நடவடிக்கைகளை காங்கிரஸ் கவர்மெண்ட் நிச்சயம் மேற்கொள்ளும்.
தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை திமுக அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் விலை உயர்வு என்று கேட்டால், மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால் உலக அளவில் குருடாயில் விலை குறைந்த போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.
ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்சி எஸ்டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம் . இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், காங் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.