Skip to main content

உப்பு சப்பில்லாத ஆளுநர் உரை - ஓபிஎஸ் விமர்சனம்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

Governor's speech without salt - blame OPS

 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியுள்ளது. ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.

 

ஆளுநர் உரையாற்றும்போது அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

 

இந்நிலையில், இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசின் சார்பில் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட உரை குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆளுநர் உரை என்றால், வருங்காலத்தில் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு கனவு இருக்க வேண்டும்; அந்தக் கனவை நனவாக்கும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும்; தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை, திமுக ஆட்சியின் ஆளுமைத் திறமையின்மையை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

 

ஆளுநர் உரையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதலமைச்சர் அயராத உழைப்புடன் அக்கறையுடன் அரசை வழிநடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலை என்னவென்றால் தமிழ்நாட்டு மக்களை வீழ்ச்சியை நோக்கி திமுக அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

 

மக்களைத் தேடிக் மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்கள் பெயரளவிற்கு உள்ளதே தவிர சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்பதுதான் எல்லோரின் கருத்தாக இருக்கிறது. பொதுமக்களின் மீது அக்கறை இல்லாத, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கக் கூடிய, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு வழிவகுக்கின்ற, வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுக்காத திமுக ஆட்சியின் ஆளுமைத் திறமையின்மையை படம்பிடித்துக் காட்டும் உப்பு சப்பில்லாத உரையாக அமைந்துள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்