எடப்பாடி பழனிசாமி அரசின் விவசாய விரோதப் போக்கை கண்டித்து நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரன்,
பன்னீர்செல்வம் மன்னார்குடியில் பேசும்போது, ஏதோ பதவி வெறியில், விரக்தியின் உச்சிக்கு சென்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2016 டிசம்பர் 5ஆம் தேதி பன்னீர்செல்வம் யாரால் அன்றைக்கு முதலமைச்சராக்கப்பட்டார். சசிகலாவுக்கு பன்னீர்செல்வத்தை பிடிக்கவில்லை என்றால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இவர் எப்படி முதலமைச்சராக்கியிருக்க முடியும்.
நான் ஒன்றும் தியாகி அல்ல. ஆனால் நீங்கள் துரோகிகள் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். சாப்பிட்ட வீட்டில் கழுவிய கை காய்வதற்குள் துரோகம் செய்யும் மனநிலையில் உள்ள நீங்கள்தான் என்னை பார்த்து தியாகியா என்று கேட்கிறீர்கள். ஜெயலலிதா இருக்கும்போது நான் ஆசைப்பட்டிருந்தால் நான் முதலமைச்சராகி இருக்க முடியும் என்பதுதான் உண்மை.
1987ல் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா அவர்கள் ஜெ. அணியை நடத்தியபோது இவர் ஜானகி அணியில் இருந்தவர். ஜெயலலிதா போட்டியிட்ட போடி தொகுதியில் இரட்டைப் புறாவில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலா பின்பு நின்றுகொண்டு ஒட்டு கேட்டவர்.
துரோகத்திற்கு ஒரு சின்னம் போட வேண்டும் என்று சொன்னால், அதில் ஒரு பக்கம் பன்னீர்செல்வமும் மறுபக்கம் பழனிசாமியையும் போட வேண்டும். இவ்வாறு பேசினார்.