Skip to main content

முதல்வர் ஸ்டாலின் உத்தரவை வரவேற்ற ஓ.பன்னீர்செல்வம்..!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021
O. Panneerselvam to welcome Chief Minister Stalin's order

 

தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் அதிகமாகி இருப்பதால் சில நாட்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது அமலில் இருந்தது. இந்நிலையில் இறப்பின் விகிதமும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதால் தமிழக அரசு வரும் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதனை வரவேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர் தெரிவித்ததாவது, “கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய்த் தொற்று பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும். எளியோரின் பசிதீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன். மே 10ஆம் தேதி முதல் தான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதாலும், இன்றும், நாளையும் கடைகள் திறந்திருக்கும் என்பதாலும் பொதுமக்கள் அவசரம் கொள்ளாமல், கூட்டம் கூடுதலைத் தவிர்த்து பொறுமையாக சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்ல வெண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். 

 

காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் ஏழை, எளிய பொதுமக்கள், அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல ஏதுவாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரமும் இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் மினி கிளினிக்குகளின் எண்ணிக்கையையும், அதில் தற்காலிக மருத்துவர்களின் நியமனத்தையும் அதிகரித்து 24 மணிநேரமும் இயங்கச் செய்தால் பெரிய அரசு மருத்துவமனைகளில் கூட்டம் குறையும் நோயாளிகளின் சிரமமும் களையப்படும்.

 

கடந்த ஓராண்டிற்கும் மேலாக தொடர்ந்து கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்களது சேவையைக் கொளரவிக்கும் வண்ணம் அரசு ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை வழங்கி அவர்கள் பணியை ஊக்குவிக்க வேண்டும். மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள், படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும், உயிர் பலி எண்ணிகையை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். நோய்த் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து அரசு கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடித்து, மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் எனப் பொதுமக்களையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மேலும் ‘பாதுகாப்பாய் இருப்போம், தொற்றுப் பரவலை தடுப்போம்’ எனத் தெரிவித்தார்.

 

 


 

சார்ந்த செய்திகள்