திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் முனியாண்டி போட்டியிடுகிறார். இதனையொட்டி அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம், அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் துணை முதல் அமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
நீங்கள் வாரணாசி சென்று வந்ததே பாஜகவில் சேருவதற்குத்தான் என்று தங்கத் தமிழ்ச்செல்வன் கூறுகிறார் என்ற கேள்விக்கு, ''தர்ம யுத்தம் ஆரம்பித்த காலத்தில் இருந்து தங்கத் தமிழ்ச்செல்வன் கருத்து எதுவுமே பதில் சொல்வது இல்லை'' என்றார்.
11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தது தொடர்பான வழக்கில் பாதகமான நிலை வரும் என்பதால்தான் 3 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகரிடம் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, ''சட்டம் எல்லோருக்கும் தெரியும். ஒரு இயக்கத்தில் உறுப்பினராக இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்தவுடன், அவர் இன்னொரு கட்சியில் பதவி பெற்றால், சட்டமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது'' என்றார்.
பிரபு, கலைச்செல்வன், இரத்தினசபாபதி ஆகியோர் தாங்கள் அமமுகவில் இல்லை என்கிறார்களே? என்றதற்கு, ''அமமுகவில் இல்லை என்று சொன்னால் அவர்கள் தானாக முன்வந்து சட்டப்பேரவைத் தலைவரிடம் விளக்கம் அளிக்கலாம். அவர்கள் அந்தக் கட்சியில் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற ஆவணங்கள் சட்டபேரவைத் தலைவரிடம் உள்ளது. அவர்களுக்கு துணிச்சல் இருந்தால், தாங்கள் அமமுகதான் என்று சொல்வதுதான் வீரத்திற்கு அழகு. இது மிகவும் கோழைத்தனமான செயல்'' என்றார்.
திருப்பரங்குன்றம் அமமுகவின் கோட்டையாக மாறியுள்ளது என்று தங்கத் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளாரே?
ஆரம்பக்கட்டத்தில் இருந்து பார்த்தீர்கள் என்றால் தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு நான் இதுவரை பதிலே சொன்னதில்லை என்றார்.