செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது என்றும் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரிய வழக்கின் தீர்ப்பு, செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறையின் மனு உள்ளிட்ட மூன்று மனுக்கள் மீதும் நாளை உத்தரவு வழங்கப்பட இருக்கிறது என்றும் கூறி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் இது குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நீண்ட விமான பயணத்திற்கு பிறகு தற்போது தான் வந்து சேர்ந்தேன். என் சக அமைச்சரான செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சட்டப்பிரச்சனை ஒன்றை இந்தத் தருணத்தில் எடுத்துக்கொண்டு அதனை வைத்து அடக்குமுறையான சூழலை உருவாக்கியிருப்பது வருத்தமளிக்கிறது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையிலும், 17 மணிநேரம் தொடர் விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. எனது முதன்மையான அக்கறை அவரது உடல் நலனில் தான் உள்ளது. அவரை நேரில் சந்திக்க முடியாததால், அவர் விரைவில் பூரண நலத்துடன் குணமடைய பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.