சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையில் 71 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 13 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் இருந்து வருகிறார். இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் ஊழல் நடைபெறுகிறது, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை, சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாகக் கூறி காங்கிரஸ் அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் பாஜக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.
இந்நிலையில் பாஜக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம், சத்தீஸ்கர் சட்டசபையில் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை குரல் வாக்கெடுப்பு நடந்தது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாஜக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது.