சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் சேர்ப்பது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் தனித் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் நாளை பெரியகுளத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற இருந்த நிலையில் கூட்டமானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில் அதற்கான காரணங்கள் குறித்து கலந்தாலோசிக்க இந்தக் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுவதாக மற்றொரு பேச்சும் இருந்தது.
இந்நிலையில் தென்மாவட்டங்களில் உள்ள தொண்டர்கள் சந்திப்பதற்காக சசிகலா இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, ''அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தொண்டர்கள் என்னை சந்திப்பார்கள். பிள்ளைகளைச் சந்திக்க போகிறேன்'' என்றார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் ரத்தாகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.