
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சபாநாயகரின் இருக்கை அருகில் செங்கோல் ஒன்று நிறுவப்பட உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நாடு சுதந்திரம் பெற்றதை செங்கோல் குறிக்கிறது. ஆட்சி பரிமாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் முறை இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது. செங்கோலை வடிவமைத்த உம்மிடி சகோதரர்களை பிரதமர் மோடி கவுரவிக்க உள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்காக தமிழகத்தை சேர்ந்த திருவாடுதுறை, மதுரை, பழனி உள்ளிட்ட 20 ஆதினங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படுவதன் மூலம் தமிழுக்கும் தமிழருக்கும் பிரதமர் மோடி பெருமை சேர்க்கிறார். நாடாளுமன்றத்தை கட்டிய தொழிலாளர்களும் கவுரவிக்கப்பட உள்ளனர்.
அடுத்த 100 ஆண்டுகளுக்கு நாட்டின் சின்னமாக செங்கோல் இருக்கப்போகிறது. செங்கோல் நிறுவுவதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை. திறப்பு விழாவில் கலந்து கொள்ள மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு முறையாக அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சிகளின் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜனாதிபதி திரௌபதி முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அவர்தான் திறக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். மக்களுக்காகவாவது நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.