நரேந்திரமோடி, அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து, சிறையின் பின்பக்க வாயில் வழியாக ரகசியமாக இன்று (ஜன. 11) காலை வெளியே அனுப்பி வைக்கப்பட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டனக் கூட்டம் ஒன்றை எஸ்டிபிஐ கட்சியினர் கடந்த 29.1.2019ம் தேதி நெல்லையில் ஏற்பாடு செய்திருந்தனர். காங்கிரஸ் கட்சி பேச்சாளரும், தமிழறிஞருமான நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அந்தக் கூட்டத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை அவதூறாக பேசியதாக பாஜகவினர் புகார் அளிக்க, அவரை ஜன. 1ம் தேதி இரவு கைது செய்தது காவல்துறை. பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, ஜன. 3ம் தேதியன்று சேலம் மத்திய சிறைக்குக் கொண்டு வந்து அடைத்தனர்.
இந்நிலையில், நெல்லை மேலப்பாளையம் காவல்நிலையத்தில் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமின் வழங்கி நெல்லை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) உத்தரவிட்டது. ஜாமின் உத்தரவு கடிதத்தை, நெல்லை கண்ணன் தரப்பு வழக்கறிஞர்கள் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சேலம் மத்திய சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
அதையடுத்து, காலை 7.05 மணிக்கு நெல்லை கண்ணனை, சேலம் மத்திய சிறையின் பின்பக்க வாயில் வழியாக ரகசியமாக சிறை நிர்வாகம் அனுப்பி வைத்தது. அவருடைய மகன் சுகா, உதவியாளர் பாஸ்கரன் ஆகியோர் அவரை ஒரு காரில் அழைத்துச் சென்றனர். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி, நெற்றியில் திருநீறு என வழக்கமாக அவர் அணியும் உடைகள், ஒப்பனையுடனே சிறையில் இருந்து வெளியேறினார்.
ஜாமினில் விடுதலை செய்யப்படும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட அனைத்து கைதிகளும் வழக்கமாக சிறையின் முகப்பு வாயில் வழியாகவே அனுப்பி வைக்கப்படுவர். ஆனால், புதிய நடைமுறையாக யாருமே பயன்படுத்தப்படாத பின்பக்க வாயில் வழியாக ரகசியமாக நெல்லை கண்ணனை அனுப்பி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியினர், சேலத்தைச் சேர்ந்த அவருடைய வழக்கறிஞர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரும் சிறை முன்பு கூடியிருந்தனர். ஆனால், நெல்லை கண்ணன் சிறையில் இருந்து கிளம்பிச் சென்ற தகவல் அவர்களுக்கும் தெரியப்படுத்தவில்லை.
நெல்லை கண்ணன் ஜாமினில் விடுதலை செய்யப்படுவதை எதிர்த்து சிறை முன்பாக பாஜகவினர் கூடுவதாக கிடைத்த தகவலின்பேரில், இப்படியொரு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், பாஜக தரப்பில் ஒருவர் கூட சேலம் சிறை முன்பு வரவில்லை. எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மட்டுமே அவரை வரவேற்பதாக சேலம் சிறை முன்பாக கூடியிருந்தனர். ஆனால் அவர்களை சந்திக்க விடக்கூடாது என்பதற்காகவே சிறைத்துறை நிர்வாகம் திட்டமிட்டு, நெல்லை கண்ணனை ரகசிய வாயில் வழியாக அனுப்பி வைத்துள்ளதாக சொல்கின்றனர்.
சேலம் மாவட்ட பாஜக தலைவர் கோபிநாத்திடம் கேட்டபோது, ''நெல்லை கண்ணனுக்கு ஏற்கனவே எங்கள் தரப்பு எதிர்ப்பை பதிவ செய்துவிட்டோம். அதனால் அவர் ஜாமினில் விடுதலை ஆகும்போது கண்டனம் தெரிவிக்கும் எந்தவித திட்டமும் எங்களிடம் இல்லை. நானும் தற்போது கோனார்க்கில் இருக்கிறேன்,'' என்றார். ஆனால் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகச் சொல்லியே, நெல்லை கண்ணனை ஊடகத்தினர், ஆதரவாளர்களை சந்திக்க விடாமல் காவல்துறையும், சிறைத்துறையும் திட்டமிட்டு இவ்வாறு ஒரு வதந்தியை பரவ விட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையான நெல்லை கண்ணன் ஏவிஆர் ரவுண்டானா அருகில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடச் செல்வதாக தகவல் கிடைத்து, பத்திரிகையாளர்கள், காட்சி ஊடகத்தினர் அங்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஐஸ்வர்யம் மருத்துவமனை அருகே சென்றுவிட்டதாக தகவல் கிடைத்து அங்கே சென்றனர். காருக்குள் இருந்து நெல்லை கண்ணன் இறங்காமலேயே, 'போதும் விட்டுடுங்கய்யா...' என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டு கிளம்பி ச்சென்று விட்டார்.
இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த நெல்லை கண்ணன் தரப்பு வழக்கறிஞர் ஜாகீர் அஹமது கூறுகையில், ''குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த கூட்டத்தில் பேசிய ஒரே காரணத்திற்காக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று அவருக்கு, ஒரு வார காலத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. நீதிமன்றம் வழங்கிய ஜாமின் கடிதம், சேலம் சிறை நிர்வாகத்திடம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது. வழக்கமாக அரசியல் கைதிகள் சிறையின் முன்பக்க வாயில் வழியாகத்தான் அனுப்பி வைக்கப்படுவர்.
ஆனால், சிறைத்துறை நிர்வாகம், பாஜகவினர் அவருக்கு எதிராக கூட்டம் போட்டு கோஷம் போடுவார்கள என்று திசை திருப்பி, திருட்டுத்தனமாக பின்பக்க வாயில் வழியாக அனுப்பி வைத்திருக்கிறது. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் நேரில் சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அவருடைய வயோதிகம் காரணமாக, சிறையில் தரையில் படுத்து இருந்ததால் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு போதிய வசதிகள் சேலம் சிறையில் இல்லை,'' என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராமசுகந்தன், ''நெல்லை கண்ணனை கைது செய்து நெல்லை, சேலம் சிறை என வயதானவரை அலைக்கழித்திருப்பது கண்டிக்கத்தக்கது. பேச்சுரிமை என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் தரக்குறைவாக பேசி வரும் பாஜகவினர் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. உயர்நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய ஹெச்.ராஜா, பெண் பத்திரிகையாளர்களை மரியாதைக்குறைவாக பேசிய எஸ்வி சேகர் ஆகியோர் மீது இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கடும் கண்டனத்திற்குரியது,'' என்றார்.
இதையடுத்து நாம் நெல்லை கண்ணனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். வழக்கமான உற்சாகத்துடன் பேசினார். அவரிடம் நாம், 'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்' என திருக்குறளை சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே அவர், 'அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது' என்று சற்றும் உற்சாகம் குறைவின்றி அந்தக் குறளின் எஞ்சிய பகுதியை சொல்லி முடித்தார்.
மேலும் அவர், ''நெல்லையில் பேசும் தமிழ், இங்குள்ளவர்களுக்கே தெரிய மாட்டேங்குது. அப்புறம் எப்படி மஹாராஷ்டிராவில் இருந்து வந்திருக்கும் ராஜாவுக்கு தெரியும்? நாமெல்லாம் திருக்குறள் படித்துவிட்டு பேசுகிறோம். இந்த நேரத்தில் பாஜகவினருக்கு விவிலியம் கருத்துதான் பொருந்தும் என நினைக்கிறேன்... 'பாவம் அவர்கள். தான் இன்ன தவறு செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்கள். அவர்களை மன்னித்து விடலாம்,'' என்று நா நயத்துடன் சொல்லிச் சிரித்தார்.
அவர்தான் நெல்லை கண்ணன்.