டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் இன்று காலை 11.30 மணிக்கு சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு 20 நிமிடங்களுக்கு நீடித்தது.
இந்திய - சீன உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான பேச்சுக்கள் நாளையும், நாளை மறுநாளும் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய ராமதாஸ், இதனால் தமிழக மக்கள் பெருமையடைவதாகவும், இதற்காக தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் நரேந்திர மோடியிடம் கூறினார்கள்.
29 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி பிரதமரிடம் மனு ஒன்றை ராமதாஸ் வழங்கினார். பிரதமரிடம் வழங்கிய மற்றொரு மனுவில் கோதாவரி - காவிரி ஆறுகளை இணைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
மனுக்களை பெற்றுக் கொண்ட பிரதமர், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் சாதகமான முறையில் பரிசீலிப்பதாக உறுதியளித்தார். பிரதமருடனான ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் சந்திப்பு மிகவும் சுமூகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது என பாமக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.