தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்கான யாத்திரையை துவக்கி வைப்பதற்காக மயிலாடுதுறை அடுத்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இயக்கத்தினரும், அரசியல்கட்சிகளும் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பாஜக சார்பில் ஆளுநருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.
ஆளுநருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி திமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பொழுது ஆளுநர் ரவி சென்ற வாகனத்தின் மீது கல் எறியப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அதில், '' இன்று கவர்னர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கிருந்த திமுக தொண்டர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது. கடந்த மூன்று நாட்களாக திமுக தலைவர்கள் கொடுத்த ஊக்கத்தினால் தொண்டர்கள் நடத்திய தாக்குதல். அதனால் முதல்வர் கவர்னரிடம் மன்னிப்புகேட்கவேண்டும்.இல்லையென்றால் பதவி விலகவேண்டும். நாட்டில் மிக முக்கியமாக இருக்கும் கவர்னருக்கே முதல்வர் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அந்த முதல்வர் இழந்துவிடுகின்றார்'' என்றார்.