17வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 38 தொகுதிகளில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி போட்டியிட்டது. மத்திய சென்னை தொகுதியில் மட்டும் அக்கட்சியின் ஆதரவுடன் எஸ்.டி.பி.ஐ ஷேக் முகமது தெகலான் பகவி போட்டியிட்டார். தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் இக்கட்சி போட்டியிட்டது.
மே 23 இன்று இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட அமமுக எந்த தொகுதியிலும் முன்னிலையில் வரவில்லை. குறிப்பாக அக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளதாக சொல்லப்பட்ட தேனி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம் பகுதிகளில் கூட அக்கட்சி பெரிய அளவில் வாக்குகள் கிடைக்கவில்லை.
சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சியை விட குறைவான வாக்குகளை வாங்கி 5 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது அமமுக.
அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவை தொடங்கிய தினகரனுக்கு செல்வாக்கு இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், குறிப்பிடத்தக்க வாக்குகளை கூட அவர் பெற முடியாமல் பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் சூழலுக்கு சென்றுள்ளது அமமுக. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் வருத்தத்துடன் உள்ளனர்.