தன்னை கடத்திவிட்டதாக கடத்தல் நாடகமாடிய பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 22 வயது பெண் தனது தாயிற்கு போன் செய்து தன்னை கடத்தி விட்டதாகவும் 50000 பணம் கொடுத்தால் மட்டுமே விடுவதாக கூறுகிறார்கள் மேலும் எனது செல்போனையும் பறித்துக்கொண்டார்கள் என்றும் பதைபதைப்புக் குரலுடன் அழுதபடியே கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் அந்த பெண் பேசிய செல்போனை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். பெண்ணைக் கடத்தியவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலைக் கூறியதால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடத்தல்காரர்கள் பேசிய எண் பூந்தமல்லி அருகே இருப்பது தெரிய வந்தது.
அந்த இடம் நோக்கி காவல்துறையினர் சென்ற போது மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே அப்பெண் நின்றிருப்பதைக் கண்டு காவல்துறையினர் அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர். அப்பெண்ணிடம் காவல்துறையினர் விசாரித்ததில் கோயம்பேட்டில் ஆட்டோவில் இருவாலிபர்கள் வந்து தன்னை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியதாக கூறினார். அந்த பெண் கூறிய இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையின் ஆய்வு செய்தனர்.
அதில் அந்த பெண் தனது நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டு இருப்பதும் இதன் பின் தனது தோழியின் செல்பேசியை வாங்கிச் சென்று தனது தாயிடம் பேசியதும் தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்ததில் அப்பெண் தன்னைக் கடத்தியதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். தனது செலவிற்காக நண்பர்களுடன் சேர்ந்து இத்தகைய செயலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதன் பின் காவலர்கள் அந்த பெண்ணையும் அவரது நண்பர்களையும் எச்சரித்து அனுப்பினர்.