கரோனா வைரஸைத் தடுப்பதற்காக இந்திய தேசத்தை 21 நாட்களுக்கு முழுமையாக முடக்கியிருக்கும் பிரதமர் மோடி, அனைத்து மாநில அரசுகளும் எந்தளவுக்கு தனது உத்தரவை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதைத் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார். ஒவ்வொரு மாநிலத்தின் நிலவரங்களும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மோடிக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநில அரசின் உயரதிகாரிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது பிரதமர் அலுவலகம்.
இந்த நிலையில், மோடியின் 21 நாள் நாடடங்கு உத்தரவுக்கு பாமக நிறுவனர் ராமதாசின் யோசனையும் முக்கிய காரணமாக இருக்கிறது என்கிறார்கள் மத்திய அரசோடு தொடர்பில் இருக்கும் தமிழக பாஜகவினர்.
கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கும் என சர்வதேச நாடுகளிலுள்ள வைரலாஜி துறையினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் டாக்டர் என்கிற முறையில் அதன் விபரீதத்தை உணர்ந்திருந்தார் பாமக எம்.பி.யான டாக்டர் அன்புமணி. இது குறித்து தொடர்ச்சியாக எச்சரித்து வந்த அன்புமணி, 21 நாட்கள் முழுமையான ஊரடங்கை அமல்படுத்துவது மட்டுமே தீர்வு என்பதை வலியுறுத்தியபடியே இருந்தார்.
இதனையறிந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை தொடர்புகொண்டு விவாதிக்க, அப்போது பிரதமரிடம் பேச விரும்புவதைத் தெரிவித்திருக்கிறார் ராமதாஸ். இதனையடுத்து, பிரதமரிடம் கலந்துப்பேசிவிட்டுச் சொல்வதாகத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஞாயிறு இரவு பிரதமரிடம் நீங்கள் பேசலாம் எனத் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, மோடியிடம் பேச காத்திருந்தார் ராமதாஸ் (இதனை, மோடியிடம் பேச காத்திருக்கும் டாக்டர் ராமதாஸ் என்கிற தலைப்பில் நக்கீரன் இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தோம்).
அதேபோல, ஞாயிறு இரவு 11 மணிக்குப் பிரதமர் மோடியிடம் பேசியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். இது குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட பாமக தலைவர்களில் ஒருவர், ‘’கரோனா தாக்குதலில் இந்தியா மிக மோசமான சூழலில் இருக்கிறது. உலக சுகாதார அமைப்பினரிடமிருந்தும் பல்வேறு மருத்துவ நிபுனர்களிடமிருந்தும் கிடைக்கும் தகவல்கள் ஜீரணிக்க முடியாதவைகளாக இருக்கின்றன. கரோனாவை ஒழிக்க மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படாத சூழலில் அதனைப் பரவாமல் தடுப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். நோய் பரவுகிற மூன்றவது நிலையில் இந்தியா தள்ளப்பட்டிருப்பதாகவும் உணர முடிகிறது. அதனால் குறைந்தபட்சம் 15 நாட்கள் முழுமையான ஊரடங்கை கொண்டு வாருங்கள். மக்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்வதுதான் ஒரே வழி.
உங்கள் வார்த்தைக்கு இந்திய மக்களிடம் மதிப்பு இருக்கிறது. அதனால் முழுமையான ஊரடங்கைக் கொண்டு வாருங்கள் எனப் பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறார் ராமதாஸ். ஏற்கனவே டெல்லியிலுள்ள எயிம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும், அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளிலுள்ள வைரலாஜி நிபுனர்களும் இதே கருத்தை பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தியிருந்தனர். அதனை டாக்டர் ராமதாஸிடம் பகிர்ந்துகொண்ட பிரதமர், இது குறித்த விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது. உங்கள் யோசனைக்கு மிகவும் நன்றி எனச் சொல்லியுள்ளார். இந்தச் சூழலில்தான், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாள் இந்தியாவை முடக்கி வைக்கும் பிரகடனத்தை வெளிப்படுத்தினார். மோடியின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் டாக்டர் ராமதாசின் யோசனையும் ஒரு காரணமாக இருந்துள்ளது‘’ என்கிறார்.