Skip to main content

“இதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் ஓயமாட்டேன்” - சசிகலா

Published on 21/10/2022 | Edited on 21/10/2022

 

“I will not rest without putting an end to this” - Sasikala

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் “ஆய்வு வரம்பின் பிற்பகுதியை பொறுத்த வரையில் வி.கே. சசிகலா, கெ.எஸ்.சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்“தமிழகத்தில் இன்றைக்கு விவசாயிகளின் நிலையோ மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. விவசாயிகள் விளைவித்த நெல்லை ஈரப்பதம் அதிகம் உள்ளது என்ற காரணத்தை காட்டி அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் எடுக்காமல் காலம் தாமதம் செய்வதால், டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் எங்கு பார்த்தாலும் சாலைகளிலேயே நெல்லை கொட்டிவைத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்பதைத்தான் பார்க்க முடிகிறது. அவ்வாறு சாலைகளில் கொட்டி வைத்துள்ள நெல்மணிகளும் தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேற்கொண்டு நனைந்து கொண்டே இருக்கிறது. திமுக தலைமையிலான அரசு இதற்கு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் விவசாயிகளை தவிக்கவிடுவது எந்த விதத்தில் நியாயம் என்பதை திமுகவினர் சிந்தித்து பார்க்க வேண்டும்.

 

இவ்வாறு மக்கள் துன்பப்படுவதை வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக இரண்டு நாட்களாக தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தி, பார்த்துக்கொண்டது தான், இன்றைய திமுக ஆட்சியாளர்களின் பிரதான வேலையாக தெரிகிறது. இது போன்ற திமுகவினரின் சதித்திட்டங்கள் வெகு நாட்களுக்கு நீடிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மேலும், தமிழக மக்களின் பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லையா? அல்லது எப்படி வேலை செய்வது என்பது தெரியவில்லையா? என்று எண்ணத்தோன்றுகிறது. விதி வசத்தால் ஆட்சியை பிடித்தவர்களுக்கு, ஓட்டு போட்ட மங்களை எப்படி காப்பாற்றுவது என்று துளி கூட சிந்தனை இல்லை. திமுகவினருக்கு இப்போது இருக்கும் ஒரே பயம் என்னவென்றால், எதிர்க்கட்சியினர் யாரும் தங்களை எந்த கேள்வியும் கேட்டுவிடக்கூடாது, இன்றைய ஆட்சியின் அவலநிலைகளை எவ்வாறு மூடி மறைப்பது என்று மட்டும் நினைக்கிறார்கள்.

 

ஆனால் நானோ மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் எண்ணத்தில் எனது பேட்டிகள் மற்றும் அறிக்கையின் வாயிலாகவும், மக்களை நேரில் சந்திக்கும் வேளையிலும், இந்த ஆட்சியாளர்களை பார்த்து தொடர்ந்து கேள்விகளை கேட்பதால், என் மேல் வீண் பழி சுமத்தி எப்படியாவது எனது வாயை அடைத்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள். திமுகவினரின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. நான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் வந்துள்ளேன். திமுக தலைமையிலான ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் நான் ஓயப்போவது இல்லை என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்