புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
"தமிழ் மொழிக்காக பாடுபட்ட கோபதி என்கிற மன்னர் மன்னன் இறந்து விட்டார். சிறந்த தமிழறிஞர், சுதந்திர போராட்ட வீரர். பாரதிதாசன் மகன் மன்னர்மன்னன் இறப்பு புதுச்சேரி மாநிலத்திற்கு பெரும் இழப்பு. மாநில அரசின் சார்பில் அவரது உடல் பாரதிதாசன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது. பாரதிதாசன் மகன் உடலுக்கு மாநில அரசின் சார்பில் இறுதி சடங்கு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் இன்று (07.07.2020) 32 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டினாலும் தற்போது தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. நோயாளிகளே அரசிடம் நேரடியாக சிகிச்சை, உணவு ஆகியவை பெறும்போது, மாவட்ட நிர்வாகம் சரியாக செயல்படுகின்றது. அவர்களை பாராட்டுகின்றேன்.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் ஆர்கானிக் எதிர்ப்பு மாத்திரைகளை வழங்கி வருகின்றோம். சித்தா முறையில் (ஆயுஷ் நிறுவனம்) சிகிச்சை அளித்தால் கரோனா நோயாளிகள் சீக்கிரம் குணமடைந்து வருவதால், சித்த மருத்துவர்களையும் இந்த சிகிச்சைக்கு பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 513 பேருக்கு இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி, ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நோயாளிகள் அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஜிப்மரில் ஆயிரம் பேருக்கும், அரசு மருத்துவமனையில் 400 பேருக்கும் பரிசோதனை செய்ய முடியும். தனியார் மருத்துவ கல்லூரிகளும் உமிழ்நீர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்துள்ளோம். இதனால் பரிசோதனையை அதிகரிக்க முடியும். இதனால் நோயாளிகள் அதிகளவு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க முடியும். அதனால் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்றார்.