மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஜம்மு காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
மத்திய அரசு அங்கு அமைதியான சூழலை உருவாக்கி, பொதுமக்களை அச்சமின்றி வாழ செய்யும் வழிமுறைகள் குறித்து முன் முயற்சிகளை எடுக்காமல், அங்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள சிறப்பு உரிமைகளை ரத்து செய்து, முன்னாள் பிரதமர் நேரு, ஐநாவில் அளித்த வாக்குறுதிகளை மீறும் வகையில் செயல்பட நினைப்பது குறித்து கவலையுடன் ஆய்வு செய்யப்பட்டது.
இச்சூழலில் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் நாம் உறுதியாக நின்று, உலகிற்கு காட்ட வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
காஷ்மீரில் அமைதியை குலைக்கும் எந்த நடவடிக்கைகளையும், ஜனநாயக வழியில் எதிர்ப்பதும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
தற்போது அங்கு அமைதியை குலைக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை (06.08.2019) கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதில் சமூக நீதி கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள், என அனைவரையும் ஒருங்கிணைத்து ஜனநாயக வழியில் பங்கேற்கச் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.