ஆர்.என்.ரவி ஆளுநர் பணியைத் தவிர அனைத்து பணிகளையும் செய்கிறார் எனத் தமிழகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிராக இந்த திராவிட மாடல் கொள்கை இருக்கிறது. திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. அதனை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் மாளிகை செலவுகள் குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என திமுக அரசு குறித்து ஆளுநர் ரவி தனியார் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருந்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆளுநரின் கருத்துக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர்.என்.ரவி ஆளுநர் பணியைத் தவிர அனைத்து பணிகளையும் செய்கிறார் எனத் தமிழகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக விமர்சித்து 11 பக்கத்திற்கு பிரமாண பத்திரம் எழுதியுள்ளார். அதில், “ஆர்.என்.ரவி ஆளுநர் பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார். சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். திராவிடத்துக்குத் தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார். சிவாஜி ஏன் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார். தனக்குத் தோன்றும் புதிய காரணங்களை - புனைவு காரணங்களைக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சட்டத்துக்குப் புறம்பான விளக்கங்கள் சொல்கிறார். அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதையே பேசுகிறார்.
மேற்கூறிய குற்றச்சாட்டுகளில் முதல் இரண்டிற்கு மாண்புமிகு ஆளுநர் அவர்களின் தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமோ, பதிலோ அளிக்கப்படவில்லை. மூன்றாவது குற்றச்சாட்டிற்கு மட்டும் ஒரு பொருந்தாத விளக்கத்தை அளித்துள்ளார். தரவுகள் அடிப்படையில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் சொல்லப்பட்ட இந்த குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் அலுவலகம் உரிய விளக்கம் வழங்காமல் பொதுவாக நிதியமைச்சர் கூறியதை உண்மைக்கு புறம்பானது என்று சொல்வது சரியல்ல. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமம்.
இவ்வளவு கேள்விகளைக் கேட்ட ஊடகவியலாளர், 'ஆன்லைன் சூதாட்ட கம்பெனி உரிமையாளர்கள் உங்களைச் சந்தித்தார்களா?' என்று ஏன் கேட்கவில்லை? அல்லது ஆளுநர் கேட்கக்கூடாது என்றாரா? ஆளுநர் ஆர்.என். ரவியை புரிந்துகொள்ள இது ஒன்றே போதும். அவரைப் போல ஒரு பக்கம் பதிலளிக்கத் தேவையில்லை. இந்த ஒரு வரியே போதும். கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர் ராஜ் பவனில் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார் என்பதைத்தான் அந்தப் பேட்டி காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.