Skip to main content

“அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் சொத்துவரி உயர்த்தப்பட்டது”  - அமைச்சர் சிவசங்கர்!

Published on 08/10/2024 | Edited on 08/10/2024

 

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் (06.10.2024) நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், 10 லட்சத்திற்கு மேலானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, மக்கள் வெளியேற முடியாமல் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மக்கள் பலரும் அவதிப்பட்டனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5 பேர், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.  சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் மெரினா கடற்கரையில் விமானப் படை சார்பில் நடைபெற்ற வான் சாகச நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக அரசின் சார்பில் விமான சாகச நிகழ்ச்சிகளுக்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெப்ப பாதிப்புக்கு அரசால் நடவடிக்கை எடுக்க இயலாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு மீது அதிமுக குற்றம்சாட்டுகிறது. சுமார் 15 லட்சம் மக்கள் கூடுவார்கள் என்று சொன்னதே விமானப் படை அதிகாரிகள்தான். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே உள்ளிட்ட துறைகள் மூலமாக அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்ற ஒரு கேள்வி கூட எழவில்லை. மத்திய அரசை எடப்பாடி பழனிசாமி குறை கூறாது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் அதிமுக சார்பில் இன்று சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மனிதச் சங்கிலி போராட்டம் குறித்துப் பேசுகையில், “அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலையொட்டி சொத்துவரி உயர்வை அதிமுக அரசு திரும்பப் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது தேவையற்றது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்