அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்திக்கும்போது அவர் தெரிவிக்கும் கருத்துகள் பலமுறை விவாதமாகியிருக்கின்றன. சமீபத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று சொன்னது மிகப்பெரிய விவாதமானது. டெல்லிக்கு ராஜாவானலும் தமிழகத்தில் பிள்ளை மாதிரிதான் என்று பாஜகவை கூறி கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்தநிலையில் மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று செய்தியாளர்கள் காத்திருந்தனர். அதன்படி செய்தியாளர்களை சந்திக்க வந்த செல்லூர் ராஜு, அவர்களிடம் ஒரு அறிக்கையை கொடுத்துவிட்டு புறப்பட தயாரானார்.
செய்தியாளர்கள் பேட்டி கொடுங்கள் என கேட்டபோது, “நான் கரோனாவுடன் மக்கள் வாழ பழகிக்கொள்ளள வேண்டும் என பேட்டி கொடுத்தேன். ஆனால் நீங்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என அமைச்சர் கூறினார் என செய்தி போட்டீர்கள். அன்றைக்கு முகக்கவசம் அணிந்துதான் ஆய்வு செய்தேன்.
பேட்டி அளிக்கும்போதுதான் முகக்கவசத்தை எடுத்துவிட்டு பேசினேன். இது தவறா தேவையான தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளது. இதனை எனது பேட்டியாக போட்டுக்கொள்ளுங்கள். இனிமேல் பேட்டி கொடுக்க மாட்டேன்” என கூறிவிட்டு புறப்பட்டார்.