ஆவின் நிர்வாகத்தில் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுவதால் பால்வளத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்வதோடு, ஆவின் அதிகாரிகள், ஊழியர்களை கூண்டோடு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆவின் பாலகத்தில் தொடர்ந்து தண்ணீர் கலந்த பாலினை விற்பனை செய்ததாக நேற்று (24.06.2020) 8 பேர் கைது செய்யப்பட்டு, 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
ஆவின் நிறுவனத்தின் பால் பண்ணைகள், பால் கொள்முதல் நிலையங்கள், குளிரூட்டும் நிலையங்களில் பணியாற்றி வரும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் துணையோடு இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. தரமான பாலினை வழங்க வேண்டிய அதிகாரிகள் துணையோடு இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியளிக்கிறது.
அதிலும் ஆவின் நிர்வாகத்தில் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை லஞ்சம், ஊழல் தலை விரித்தாடுவதால் தரமற்ற பாலினை கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்த பாலை திருட்டுத்தனமாக விற்பனை செய்து விட்டு அதற்கு ஈடாக தண்ணீர், சோயா பவுடர், ஜவ்வரிசி, குளுக்கோஸ் போன்றவற்றை கலப்படம் செய்து ஈடுகட்டுவது, அதற்கு அதிகாரிகள் தொடங்கி அமைச்சர் வரை ஆதரவு இருப்பது என்பது தொடர் கதையாகி வருகிறது.
மேலும் ஏற்கனவே மதுரை ஒன்றியம், நெல்லை ஒன்றியம் இரண்டாக பிரிக்கப்பட்டு அதன் காரணமாக பல லட்ச ரூபாய் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், மேற்கண்ட முறைகேடுகள் காரணமாக பல கோடி ரூபாய் வரை ஆவின் நிறுவனம் இழப்பை சந்தித்து வருகிறது.
எனவே இந்நிலை மாறிடவும், ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை களைந்திடவும் வேண்டுமானால், பால்வளத்துறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
ஆவின் பால் பண்ணைகள், பால் கொள்முதல் நிலையங்கள், பால் குளிரூட்டும் நிலையங்களில் பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக கூண்டோடு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும். ஓராண்டுக்கு மேல் எந்த ஒரு அதிகாரியும், ஊழியரும் ஆவின் நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணியில் இருக்க அனுமதிக்கக்கூடாது. அப்படி செய்தால் மட்டுமே ஆவின் நிர்வாகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுத்திட முடியும்.
ஆவின் பால் தரமான பால், தாய்ப்பாலுக்கு நிகரான பால் என விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. அதற்கான உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.