தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் மற்றும் துணைத்தலைவர் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்கவில்லை. சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் கிரி, “திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று அரசு கலைக் கல்லூரி இருக்கிறது. கலைஞர் பெயரில் ஒன்றும் அண்ணா பெயரில் ஒன்றும் வந்தவாசி பகுதியில் ஒரு கல்லூரியும் உள்ளது. செங்கம் தொகுதியில் ஒரு கல்லூரி கூட இல்லை. செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டு கடந்த ஆண்டு மட்டும் 12 ஆம் வகுப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கு மேலும் தனியார் பள்ளியில் படித்தவர்கள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் இருக்கின்றனர். இதனால் செங்கம் தொகுதிக்கு கல்லூரி வேண்டும்” என்றார்.
இதற்குப் பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஓராண்டில் 31 கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளது. அங்கு 3 கல்லூரிகள் இருக்கின்றது. மாணவர் சேர்க்கை குறைவாகத்தான் உள்ளது. சபாநாயகர் கூட கல்லூரி ஒன்றினை கேட்டுள்ளார். எந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறதோ அங்கு கல்லூரிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” எனக் கூறினார்.