தி.மு.க. ஆட்சிகாலத்தில் புயல், வெள்ள நிவாரணம் எவ்வளவு வழங்கப்பட்டது என்பது குறித்து கணக்கு பார்க்கலாமா என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சவால் விட்டிருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நடந்த வாக்காளர் முகாமினை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர், “நிவர், புரவி புயல் காரணமாகப் பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும் அதீத கனமழையால் பள்ளமான இடங்களில் பயிர்கள் முழ்கிப் பாதிக்கப்பட்டுள்ளது. அது கணக்கெடுக்கப்பட்டு வருகிறது, வாய்க்கால்கள் தூர் வாரிய காரணத்தினால் வீடுகளில் தண்ணீர் தேங்காத அளவிற்கு மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நேரடியாகக் களத்தில் ஆய்வு மேற்கொண்டதே காரணம்.
எதிர்க்கட்சி தலைவர் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைக் கூறலாமே தவிர, போகாத ஊருக்கு வழிகாட்டக்கூடாது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் உட்பட மக்களின் தேவையை உணர்ந்து உடனடியாக நிறைவேற்றி வருகிறார். தி.மு.க. ஆட்சிகாலத்தில் புயல், வெள்ள நிவாரணம் எவ்வளவு வழங்கப்பட்டது குறித்து கணக்கு பார்க்கலாமா? வறட்சி காலத்திலும் நிவாரணம் கொடுத்த அரசு அ.தி.மு.க. அரசு. உரிய நிவாரணம் உரியவர்களுக்கு வழங்கப்படும்.” எனச் சவால்விட்டிருக்கிறார்.