ஆத்தூர் தொகுதியில் உள்ள பேரூராட்சிகளான கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், தாடிக்கொம்பு, அகரம் பேரூராட்சிகளில் போட்டியிட தி.மு.க. சார்பாக விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேர்காணல் நடத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், தாடிக்கொம்பு, அகரம் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் தி.மு.க. சார்பாக போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நிகழ்ச்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. தலைமை அலுவலகம்மான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நேர்காணலுக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் பசீர் அகமது, ஒன்றிய செயலாளர்கள் சிவகுருசாமி, நெடுஞ்செழியன், வடக்கு ஒன்றிய செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் தி.மு.க. சார்பாக விருப்ப மனு கொடுத்தவர்களிடம் வார்டில் அவர்களுக்குள்ள செல்வாக்கு, பலம், கட்சி பணி உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களிடம், ‘அதே வார்டில் வேறு ஒருவருக்கு இடஒதுக்கீடு செய்து சீட் வழங்கினால் தேர்தல் பணி ஆற்றுவீர்களா?’ என்று கேட்டதாகவும், அதற்கு பணியாற்றி அவரை வெற்றிபெற வைப்போம் என்று கூறியதாகவும், நேர்காணலில் கலந்துகொண்ட சிலர் தெரிவித்தனர். நான்கு பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற நேர்காணலில் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.