Skip to main content

“பா.ஜ.க.வின் ஒரே நாடு, ஒரே மொழி கொள்கை எடுபடாது” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

minister i periyasamy said One countryone language policy of BJP will not be taken

 

தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கம்பம் வடக்கு நகர செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு நகர செயலாளர் செல்வக்குமார் வரவேற்றார். மாநில தீர்மானக்குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பாண்டியன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கம்பம் இராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

இதனையடுத்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க. அரசு செய்த சாதனை என்னவென்றால் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முதியோர்களுக்கு வழங்கிய உதவித்தொகையை நிறுத்தியதுதான் சாதனை. சுமார் 7.5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகையை நிறுத்திய பெருமை முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரையே சேரும். நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றவுடன் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களை உடனடியாக பதவி உயர்வு செய்ததால் அவர்கள் பணிசெய்யும் இடத்திற்கு புதிதாக ஆட்கள் நியமிக்க வேண்டிய நிலை வந்தது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறக் கூடிய சூழ்நிலை உருவானது. 

 

minister i periyasamy said One countryone language policy of BJP will not be taken

 

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை சுகாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சியில் நூறு சதவிகிதம் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அனைவரும் இலவசமாக கல்வி கற்க காரணமாக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். கடந்த ஒரு வருடத்திற்குள் 1.25 லட்சம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரத்திற்காக விவசாயிகள் மனு செய்துவிட்டு காத்திருந்த காலம் போய் விவசாயிகளை அழைத்து இலவச மின்சாரம் வழங்கியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுதான்.

 

அ.தி.மு.க. ஆட்சியின்போது பணம் கூடுதலாக கட்டிய விவசாயிகளுக்குத்தான் இலவச மின்சாரம் வழங்கினார்கள். ஆனால், தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் தளபதியாரின் ஆட்சியில் ஏழை எளிய விவசாயிகளுக்குத்தான் முதலில் இலவச மின்சாரம் என்ற நிலைமை உருவாகி உள்ளது. கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்கவும், பெண்கள் இலவசமாக பேருந்தில் சென்று வேலைக்கு செல்வதும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் இன்று மட்டும் அல்ல என்றுமே குரல் கொடுக்கும் இயக்கமாக தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் உள்ளது. தமிழனின் வீரம், பண்பு, கலாச்சாரம் அத்தனையையும் பாதுகாக்கும் இயக்கமாக தி.மு.க. உள்ளது. தமிழகத்தில் உள்ள அத்தனை இயக்கமும் விரைவில் தி.மு.க.வுடன் இணைந்து செயல்படும் நிலைமை உருவாகப் போகிறது. ஒன்றிய அரசு சொல்வது போல் ஒரே மொழி, ஒரே நாடு தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் சாத்தியப்படாது. இனி கிராம ஊராட்சிகளுக்கு அதிக அளவு நிதி உதவி வழங்கி கிராமங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது தான் எனது முதல் கடமையாகக் கருதி செயல்படுவேன்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்