Skip to main content

“மலிவான அரசியல் செய்வதை எடப்பாடி பழனிசாமி கைவிட வேண்டும்” - அமைச்சர் காந்தி பதிலடி

Published on 26/10/2024 | Edited on 26/10/2024
 Minister Gandhi retorted to Edappadi Palaniswami should stop doing cheap politics

கைத்தறி நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்படும் கூலி, சொற்பாக வழங்கப்படுகிறது என்றும் இதனால், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்கள் கடும் பொருளாதார இழப்பிற்கு ஆளாகின்றனர் என்றும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டை வைத்திருந்தார். மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் அடிப்படைக் கூலியில் 15 சதவீதம் அளவிற்கு உயர்த்தி வழங்க வேண்டும் என்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் வரும் 28ஆம் தேதியன்று அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, எடப்பாடி பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நெசவுக் கூலி உயர்த்தி வழங்கப்பட்டு வரும் நிலையில் அதிமுக ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது. மேலும், அது அர்த்தமில்லாததும் கூட. சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி நெசவாளர்களுக்கு அவ்வப்போது கூலி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அடிப்படை கூலி மற்றும் அகவிலைப்படியை அவ்வப்போது 10 சதவீதம் உயர்த்தி வருகிறோம். 

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அடிப்படை கூலி, அகவிலைப்படியில் தலா 10 சதவீதம் உயர்வு வழங்கப்பட்டது. அதே போல், கடந்த 2023ஆம் ஆண்டு மே 1ஆம் தேதியில் அடிப்படை கூலியில் 10 சதவீதம் உயர்வு வழங்கப்பட்டது. இந்தாண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதியில் அகவிலைப்படியில் 10 சதவீதம் உயர்வு வழங்கப்பட்டது. பருத்தி, பட்டு, கம்பிளி, கலப்பின நூக் கொள்முதலுக்கு 15% விலை மானியத்துடன் கூட்டுறவு சங்கங்களுக்கு தரப்படுகிறது. உரிய தரப்பரிசோதனை செய்யப்பட்டு, கைத்தறி துணி உற்பத்திக்கு நூல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில், நூல்கள் தரமில்லாதவை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 

எந்த கொள்கையும், கோட்பாடும் இல்லாமல் சுய லாபம் வெற்று விளம்பரத்துக்காக மலிவான அரசியலை எடப்பாடி பழனிசாமி செய்கிறார். மலிவான அரசியல் செய்வதை எடப்பாடி பழனிசாமி கைவிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்