அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று (31-12-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “தமிழக முதல்வர் நேற்று கன்னியாகுமரிக்குச் சென்று கண்ணாடி இலை பாலத்தை திறந்து வைத்திருக்கிறார். அதை அவர் கொண்டு வந்தது இல்லை. 2018இல் அதிமுக ஆட்சியில் இருந்த போது, திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் விதமாக பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தேன். சாகர் மாலா திட்டத்தின் அடிப்படையில், அந்த திட்டத்தை மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அந்த திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்று, சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழை பெற்றோம். 2020இல் கொரோனா காலம் என்பதால் அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த திமுக அரசு, டெண்டர் விட்டு அந்த பணியை செய்திருக்கிறது” என்று கூறினார்.
எடப்பாடி பழனிசாமி வைத்த குற்றச்சாட்டுக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “கன்னியாகுமரி கண்ணாடி பாலம் திட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் அரசாணை மட்டுமே போடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒப்பந்தம் கோரி நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்தினோம். தன் இருப்பை தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி கூறும் அனைத்தும் உண்மையில்லை” என்று கூறினார்.