தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக இன்று (18-11-23) தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்பட்டு அந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர், “ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். ரத்து செய்ததாக குறிப்பிடவில்லை. அமைச்சர் கூறவேண்டிய கருத்துகளை சபாநாயகரே தெரிவித்து வருகிறார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பேரவையைக் கூட்டியது ஏன்?. அதனால், மசோதாக்களில் இருக்கும் சட்டச்சிக்கல்கள் குறித்து ஆராய வேண்டும். மேலும், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் இருந்த ஜெயலலிதா என்ற பெயரை நீக்கியது ஏன்?. என்று கேள்வி எழுப்பி எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஜெயலலிதா பல்கலைக்கழக பெயரை மாற்றியதாக உண்மைக்கு புறம்பான கருத்தைக் கூறிவிட்டு அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். பா.ஜ.க கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால், ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் ஆகிவிடும் என்று அதிமுக நினைக்கிறது. அதனால், இல்லாத ஒரு காரணத்தை கூறி வெளிநடப்பு செய்துள்ளனர். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அது போல் பூனைக்குட்டி தற்போது வெளியே வந்துவிட்டது” என்று கூறினார்.